
மும்பை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிகள் நாளை முதல் தளர்த்தப்படும் என்றும், பணத்தை 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதற்காக நவம்பர் 8 ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பழைய நோட்டுகளை டிசம்பர் 30 ம் தேதிக்குள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தங்களிடம் உள்ள பணத்தை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
அதன்படி நவம்பர் 10-ந் தேதி முதல் நவம்பர் 27-ந் வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.2.16 லட்சம் கோடி பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.33,948 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுளை மாற்றம் செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை பரீசிலித்து தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தயங்குவதை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கி கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: tamil.oneindia.com
No comments:
Post a Comment